search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டதாரி பெண் தர்ணா போராட்டம்"

    பெண்ணாடம் அருகே திருமணம் செய்து வைக்கக்கோரி காதலன் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளர். இவரது மகள் கனிமொழி (வயது 31). எம்.ஏ. பட்டதாரி.

    இவர் தற்போது பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சவுந்திர சோழபுரத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர் முருகேசன் என்பவரின் மகன் ஜானகிராமன் (32). இவர் செங்கல்சூளை நடத்தி வருகிறார். கனிமொழி- ஜானகிராமன் ஆகியோர் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கனிமொழி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் ஜானகிராமனிடம் கூறினார். இதற்கு அவர் மறுத்தார்.

    இது தொடர்பாக விருத்தாசலம் மகளிர் போலீசில் கனிமொழி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில் ஜானகிராமன் தலைமறைவாகி விட்டார். அதிர்ச்சி அடைந்த கனிமொழி பல இடங்களில் ஜானகிராமனை தேடியும், அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    காதலித்து ஏமாற்றி தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் தலை மறைவாகி விட்டாரே என்று எண்ணி கனிமொழி மனவேதனையில் இருந்து வந்தார். இன்று காலை அவர் சவுந்திரசோழபுரத்தில் உள்ள ஜானகிராமன் வீட் டுக்கு சென்றார். வீட்டில் இருந்த ஜானகி ராமனின் பெற்றோரிடம், உங்கள் மகனை கண்டுபிடித்து எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார். அதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கனிமொழி, காதலன் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஜானகிராமனின் உறவினர்கள், கனிமொழியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம் கனிமொழி கூறும்போது, ஜானகிராமன் என்னை திருமணம் செய்து கொள்ளும்வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்றார். தொடர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ×